இலங்கைக்கு 600 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..?

அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதில் 400 மில்லியன் டாலர் உடனடியாக வழங்கப்படும் என உலக வங்கியின் நிரந்தர பிரதிநிதி சியோ காந்தா நேற்று அறிவித்தார்.

1948 சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையின் மோசமான நிதி நெருக்கடியால் அதன் கையிருப்பு கடந்த இரண்டு வருடங்களில் 70 சதவீதம் வீழ்ச்சி அடைந்து மார்ச் மாத இறுதியில் 1.93 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் எரிபொருள், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது.

நிதி நெருக்கடியால் இந்த ஆண்டு அதிகமான இலங்கையர்கள் வறுமையில் வாடுவார்கள் என உலக வங்கி சமீபத்தில் எச்சரித்து இருந்தது. இலங்கை இந்த ஆண்டு திருப்பி செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் 7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் திருப்பி செலுத்த வேண்டும்.

Also Read: உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பணக்காரர் ஆனார் கௌதம் அதானி.. ஃபோர்ப்ஸ் வெளியீடு..

இலங்கையில் 11.7 சதவித மக்கள் நாளொன்றுக்கு 3.20 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்த நிலையில் இலங்கை நாணய கொள்கையை கடுமையாக்க வேண்டும், வரிகளை உயர்த்த வேண்டும் மற்றும் அதன் கடன் நெருக்கடியை சமாளிக்க மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்தியா இலங்கைக்கு ஏற்கனவே 1.9 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. எரிபொருள் உட்பட இறக்குமதிக்கு நிதியளிக்க 1.5 பில்லியன் டாலர் கூடுதல் கடனுக்காக இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read: இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை..?

இதுதவிர சீனாவிடமும் இலங்கை 1 பில்லியன் டாலர் கடனுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் கடன் வழங்க இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published.